Tuesday, April 28, 2015

பேச்சிலர் சமையல் குறிப்புகள்

இப்படி எல்லாம் குறிப்புகள் எழுத வேண்டும் என்றால் நிச்சயம் சமைக்க வேண்டும். படம் பார்க்காமல் விமர்சனம் எழுதுவது போல் சமைக்காமல் சமையல் குறிப்புகள் எழுதுவது எல்லாம் பேச்சிலர்களுக்கு சாத்தியப் படுவது சற்றே கடினம் தான்!

சமைத்து விட்டு சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்று முதல் வேலையாக இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்றால் சீக்கிரம் வெகு சீக்கிரமாக அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன் தான் பல் தேய்க்க வேண்டும், சமைப்பதற்கு முன்பாகவும் பல் தேய்க்க வேண்டுமா என்று எல்லாம் குழப்பங்கள் வரலாம்.

பால் காய்ந்து கொண்டிருக்கும் பொழுது மொத்த கவனமும் அதில் தான் இருக்க வேண்டும். நான் இப்பொழுது பால் காய வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எல்லாம் லைவ் அப்டேட் செய்து வாட்ஸ்அப்பில் கடலை போட்டுக் கொண்டிருந்தால், பீர் பாட்டில் ஒபன் செய்யும் போது பொங்கி வழிவது போல பால் பொங்கி விட்டது, துடைத்து கொண்டு இருக்கிறேன் என்றும் அசடு வழிய அப்டேட் செய்ய வேண்டி இருக்கும்.

குக்கரில் அரிசிக்கு சரியான அளவு தண்ணீர் வைப்பதை விட மிக முக்கியமானது அந்த பாத்திரத்தை சுற்றியும் குக்கரில் தண்ணீர் இருக்க வேண்டியது.

ஏதோ கருகுவது போல தீய்வது போல எல்லாம் தோன்றினால், சந்தேகம் வேண்டாம் நிச்சயம் ஏதோ தீய்ந்துக் கொண்டும் கருகிக் கொண்டும் தான் இருக்கிறது. இப்படி நிறைய எழுதினால் கீதாசாரம் போல் சீக்கிரம் சமையல் சாரம் என்று புத்தகம் எழுதி விடலாம்.

அடுப்பின் மீது சில பல நிமிடங்களாக பாத்திரம் இருந்தால் நிச்சயம் சூடாகி இருக்கும். சூடாக இருக்கும் பாத்திரத்தை அப்படியே தொட்டால் சுடத் தான் செய்யும். நாம் எல்லாம் நரசிம்மா விஜய்காந்த் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு முந்தின இரவில் வடுக நாட்டு பாலையா படம் எல்லாம் பார்த்தாலும் பாத்திரத்தை அடுப்பில் அப்படியே தொடும் எண்ணம் வரலாம்! வந்தால் கட்டுப்படுத்திக் கொள்ளவும். இல்லை என்றால் கைக்கு கட்டுப் போட்டுக் கொள்ள தயாராக இருக்கவும்!

முக்கியமாக செல்போனில் சார்ஜர் பேலன்ஸ் எல்லாம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் அப்பொழுது தானே ஹாட்லைனில் சமையல் சப்போர்ட் பெற முடியும். ஹாட்லைன் என்றால் அம்மா தான் என்று அறியாதவர்கள் வாயில் எல்லாம் நிச்சயம் மண் தான்! மிக முக்கியமானது அப்பொழுது பார்த்து அப்பா ஹாட்லைனில் கிராஸ்ஸாகாமல் இருக்க வேண்டும். ஸ்கைப் இருந்தால் இன்னும் உசிதம்.

செல்போன், ஸ்கைப் என்று எல்லாம் லைவ் லைப் சப்போர்ட் பெற்றாலும், மேற் சொன்ன தீய்ந்த வாசனை வருகிறதா, சரியாக வெந்து விட்டதா என்பதை எல்லாம் சரி பார்க்கும் அளவிற்கு இன்னும் டெக்னாலஜி வளரவில்லை என்பது தான் அடிப்படையான நிதர்சனமான உண்மை! இனியாவது டெக்னாலஜி எல்லாம் டெவலப் ஆகிவிட்டது என்று சொல்வதை நிறுத்தி விட்டு Virtual Reality, Augmented Reality  போன்ற ரியாலிட்டிகள் எல்லாம் ரியலாக வேண்டும் என்று எம்பெருமானை அவ்வப்போது பிரார்த்திக்க வேண்டும்.

மதியம் சாப்பிடுவதற்கு முன்னதாக, அலுவலகத்தில் பணிபுரியும் அனுபவம்மிக்க பெண்மணியிடம், ”இன்று நானே சமைத்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று டேஸ்ட் செய்யுங்களேன் என்று பரிசோதித்த பின்னர் தான் நாம் சாப்பிட வேண்டும். (இங்கு வயதான பெண்மணி என்ற வார்த்தை பிரயோகிக்கப் படவில்லை என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்)
அப்படி பரிசோதித்த பின்னரும் பிரம்மார்ப்பணம் செய்து விட்டு சாப்பிடுதல் நலம்!