நினைவு தெரிந்த வரை, மொத்த குடும்பமும் சென்று வந்த முதல் கல்யாணம். இரு நாட்களும் நான் முழுக்கை சட்டை அணிந்திருந்தேன் என்பது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமாச்சாரங்களை ஆவணப்படுத்துவதையும் தாண்டி மிக முக்கியமானது கற்ற பாடத்தை கல்வெட்டில் பொறித்து வைப்பது!
சிறுவனாய் இருந்த போது கல்யாணங்களில் பார்த்த பலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. சிலரை என்னால் அடையாளம் காண இயலவில்லை. பலரைக் காணவில்லை! காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது!
”யாரிது?”, ”ஞாபகம் இருக்கிறதா?”, ”என்னைத் தெரியுமா” என்று கேட்பவர்கள் எல்லாம் அப்பாவிகள் அப்பிராணிகள். நல்லவர்கள். அவர்களிடம் முடிந்த வரை பேசிக்கொண்டிருக்கவும்.
”அப்புறம் தம்பி நீங்க என்ன தான் பண்றீங்க” என்று கேள்விகள் வரவில்லையெனில் சமுதாயம் பண்பாடு என்ற ஒன்றை மறந்துக் கொண்டிருகிறதா என்ற ஆராய ஆரம்பிக்கலாம். இப்படி கேட்பவர்கள் சராசரிகள். சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் எல்லாவற்றையும் விட கடுப்பேற்றும் சமாச்சாரம், முதல் சந்திப்பில் நான்காம் கேள்வியாய் “எவ்வளவு வயசாகிறது?” என்று கேட்பவர்கள்.
நான் என்ன சினிமா நடிகையா? இல்லை இவர்கள் எல்லாம் சினிமா நிருபர்களா?
பி.கு
பின்லேடனை பாகிஸ்தானில் அமெரிக்கா கொன்றிருக்கலாம். ஆனால் சொந்தக்காரர்கள் என்ற போர்வையில் இருக்கும் சிலர் பின்லேடன்(லேடிகள்) மிக பயங்கரமானவர்கள். அவர்களிடமிருந்து நம்மை அமெரிக்கா என்ன ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!