Sunday, January 08, 2012

ஸ்டீவ் ஜாப்ஸ் கதையின் கதை

முதல் முறை அமெரிக்க பயணம். ஆறு வாரங்கள் ஆனால் மூன்று மாதம் வரை போகலாம் என்று சொல்லி அனுப்பியவர்கள் ஐந்தே வாரங்களில் வரச் சொல்லி விட்டார்கள்.

அலுவலகத்திற்கு முட்டாய் போதும், வீட்டிற்கு அமெரிக்கா போய் வந்த பெருமை போதும் ஆனால் நண்பர் ஒருவருக்கு ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டும் என ஆலோசனை கேட்டேன்.

அதற்கு முன் பல முறை கடையில் நான் ஙே என்று விழித்த போது ஆலோசனை கொடுத்தவர். கார்டை ரொம்பவும் தேய்க்காமல் காப்பாற்றியவர்.
நல்லதாக வேண்டுமா இல்லை மொக்கையாக இருந்தால் பரவாயில்லையா என்று கேள்வி கேட்டார்.. நல்ல நண்பர், ஆகையால் நல்லதாக வேண்டும் என்றேன். அப்படியானால் ஐ-பாடு வாங்கிக் கொடு என்றனர்.

கடையில் பபிள் கம் அளவு இருந்த 1GB பிளேயர் 99.99 டாலர் மட்டுமே. மேற்படி 8.5 சதவிகிதம் வரி என்றனர். மத்யமர் மனம் 50 டாலருக்கு 2 GB வருகிறதே என கணக்கும் கேள்வியும் கேட்க, அழைத்துச் சென்றவர் காறித் துப்பினார். ஆப்பிள் என்றால் சும்மாவா என்றார்? நல்ல வேளை தலை முடியை ஒட்ட கத்திரிந்திருந்தேன். இல்லையென்றால் நிச்சயம் பிடித்து ஆட்டியிருந்திருப்பார்.

அறைக்கு வந்த கையோடு, அவரின் அறையிலிருந்து கை நிறைய ஐ-பாடுகள் கொண்டு வந்தார். ஒவ்வொரு வகையிலும் குறைந்தது ஒன்று வாங்கி இருந்தார். எல்லாம் நெருங்கிய சொந்தங்கள் நண்பர்களுக்காக என்றார்.

நல்ல நண்பருக்கு நல்லது வாங்க வேண்டும் என்றால் ஐ-பாடை வாங்கு இல்லையென்றால் வாங்கவே வாங்காதே என்றார். தெரியாதவராக இருந்தால ஆப்பிள் ஏஜண்ட் என்று நம்பி இருப்பேன்.

ஆப்பிள் என்றால் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? அப்படி என்ன இருக்கிறது இதில் என்று தொடங்கியது உண்மையான தேடல் முடிந்த இடம் ஸ்டீவ் ஜாப்ஸ். அதற்கு முன் சிறு வயதில் பிசி பில்கேட்ஸ் எல்லாம் சும்மா, மேக் தான் மேம்பட்டது என சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். காதால் கேட்பது எல்லாம் பொய் என அவ்வளவாக அதைக் கண்டு கொள்ளவில்லை. தீர விசாரித்து நம்ப இவ்வளவு நாட்களாகி(வருடங்களாகி) விட்டது.

இந்தியா வந்திறங்கி, முதல் நாள் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் திரும்பி. கிண்டி பிளாட்பாரக் கடையில் iCon புத்தகம் வாங்கினேன்.

ஒரு மனிதனின் வாழ்க்கை சரித்திரமா இல்லை, இரஜினி சினிமா கதையா என்று தான் தோன்றியது. ஸ்டீவ் ஜாப்ஸின் பைத்தியக்கார இரசிகர்களில் மற்றும் ஒருவன் சேர்ந்தான்.

அப்படிப் பட்ட ஒரு மனிதனின் சரித்திரம் தமிழில் இல்லையே என்ற குறை, அதை நான் போக்க வேண்டும் என்று எல்லாம்அப்பொழுது தோன்றவில்லை. பிறகு நானே எழுதுவது என்று எடுத்த முடிவு முடிவாகவே இருந்தது. சேப்டர் பிரித்தலும், இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு மேல் நகரவில்லை. ஆண்டுகள் கடந்துக் கொண்டிருந்தன.

இதற்கிடையில் கூகிள் சாட்டில் அவ்வப்பொழுது பாராவுக்கு வணக்கம் சொல்லும் பொழுது எல்லாம் அவரின் :> சிக்னேச்சர் ரிப்ளை மட்டும் வந்துக் கொண்டு இருந்தது. ஒரு நாள் எங்கு இருக்கிறேன் என எல்லாம் கேட்டு விட்டு என் வீடு அவரின் வீட்டுக்கு கூப்பிடு தூரத்தில் இருப்பதால் வீட்டுக்கு கூப்பிட்டார்.

சந்தித்த போது,  ”நான் ஸ்டீவ் ஜாப்ஸ் கதை எழுதும் முயற்சியில் இருக்கிறேன் என்று சொன்னவுடன், அவனா நீ பார்வை பார்த்து ரொம்ப நாட்களாக எழுதிக் கொண்டு இருப்பது போல் இருக்கிறது என்றார். அசடு வழியும் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தேன்.

இன்னும் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்க வேண்டும் இல்லையென்றால் அவ்வளவு தான் என்றார். டெட்லைனைக்குள் டெலிவரி என்பது சராசரி சாப்ட்வேர்காரன் அகராதியில் இல்லை என்பது அவருக்கு அப்பொழுது தெரியாது!

டெட்லைன் தாண்டிய பின், மீண்டும் அவரிடம் ஐயா இன்னும் சில வாரங்கள் தாருங்கள் என்று கேட்ட தருணம் அக்மார்க் க்ளையண்ட் மீட்டிங்! இனி மேல் வாரா வாரம் ஸ்டேட்டஸ் மீட்டிங் என்று தமிழ்பேப்பரில் எழுத சொல்லி விட்டார்.

அப்பொழுதாவது அரக்க பறக்க இல்லாமல் ஆற அமர எழுதி முடித்திருக்கலாம். பார்க்கின்சன் விதியை பின்பற்றாவிட்டால் என்ன ஆவது!ஹூம். புதன் கிழமைக்கு எழுத, செவ்வாய்க்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து அவசர அவசரமாக புறப்படுவேன். [இந்த சமயத்திலாவது என் மேனஜருக்கும் என் டீம் மக்களுக்கும் நன்றி சொல்லி விடுகிறேன்] இரவு இரண்டு மணிக்கு அனுப்பி விட்டு புதன் காலை ஏழு மணிக்கு லிங்க் எப்பொழுது வரும் என கேட்டதுண்டு.
இனிமேல் செவ்வாய் மாலைக்குள் அனுப்பாவிட்டால் புதன் கிழமை பிர்சுரம் ஆகாது என்ற எச்சரிக்கைக்கு பின் சில காலம் ஒழுங்காய் இருந்தேன். மருதன் காலத்தில் வேதாளம் முருங்கை மரம் ஏறி இருந்தது! வாசகர்களின் கமெண்ட்டுகளின் ஆதரவில் ஒரு வழியாய் வாரம் தவறாது அனுப்பினேன்.

இதற்கிடையி்ல் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்து அவரின் பயோகிராபி வந்தபின், அது வரை எழுதியதை எல்லாம் சரி பார்த்து, இன்னும் எதை எதை சேர்க்க வேண்டும் என்று சேர்த்து, தொடர் வடிவில் இருந்ததை புத்தக வடிவிற்கு மாற்றி இதோ இப்பொழுது புத்தகமாக சென்னை புத்தக கண்காட்சியில் மதி நிலையத்தில்(ஸ்டால் 18,19-ல்) 184 பக்கங்கள் 100 ரூபாயில்!

பி.கு
இன்று முதல் முறையாக சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய் சுற்றிக் கொண்டிருந்த போது என் பழைய அலுவலக நண்பர் எதிர்ப்பட்டார்.

நானும் அவரும் அலுவலகப் பேருந்தில் சகபயணிகளாக இருந்த காலத்தில் பயண நேரத்தையும் தாண்டி தூங்கும் என் பிரசித்தி காரணமாக அறிமுகமானவர்.அவருடன் பேருந்தில் திரும்பி வரும் போது, “ஸ்டீவ் ஜாப்ஸை பற்றி எழுத வேண்டும் என உங்களுக்கு ஏன் தோன்றியது?” என அவர் கேட்ட கேள்விக்கான பதில் இந்தப் பதிவு!

எப்பொழுதும் அப்படி தூங்கி வழியும் நீங்கள் எப்படி எழுதினீர்கள் என்றும் அவர் கேட்டார். அதற்கு சொன்ன பதில் மிக விரைவில்.

பி.பி.கு
அம்பு எய்த அந்த நண்பர், ஞானியின் ஸ்டாலில் வாலண்டியராக பணிபுரிகிறார். அலுவலகத்திற்கு விடுமுறை விண்ணப்பத்திருப்பதாக சொன்னார். எல்லா நாளும் கண்காட்சிக்கு வருவது எனவும் அவர் முடிவு செய்துள்ளார். நானும் அவரும் ஒன்றாக பேருந்தில் திரும்பி வருவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். நான் வழக்கம் போல பேருந்தில் தூங்க வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்!

1 comment:

Time Traveller said...

As said early this post is perfectly balanced between free style writing & formal. Intersting thing is much genuine post.

PS: This time no repeated request will come.