Thursday, December 26, 2013

இராட்சசன் மீது பொறாமை!

எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. கெட்டதை கெட்டது என்று பார்த்தால் தானே அது கெட்ட பழக்கம்.

அதே போல் பெரும்பாலும் தவறுகளும் செய்வதில்லை. செய்ய வேண்டும் என்று தோன்றினால் தள்ளிப் போடாமல் செய்து முடித்து விடுவேன். தாமதமில்லாமல் தண்டனையும் கிடைத்து விடும். அப்படி ஒரு ராசி எனக்கு.

எதற்கு இது எல்லாம்? பொறாமை தப்பான கெட்ட பழக்கம் இல்லையா? ஒரு சிலர் மீது எனக்கு லைட்டாக பொறாமை உண்டு. அதில் ஒருவரை பற்றி பேசலாம் என்று தான்!

ஜெப்ரி ஆர்ச்சர். டேன் பிரவுனின் தாத்தா. (ஜெப்ரியையும் டேன் பிரவுன் பேரையும் ஒரே வரியில் எழுதுவதே தப்பு அதில் ஒப்பீடு வேறா என என்று மனசாட்சி காறி துப்புகிறது)

Eleventh Commandment,கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதற்கு காத்து கொண்டிருந்த காலத்தில் நான் படித்த முதல் ஆங்கில நாவல்! நாவலுக்கு உதவியர்கள் பட்டியலில் ‘பெயர் வெளியிட விரும்பாத இரஷ்ய மாபியாவினருக்கும்’ என்று படித்த போது எழுந்து ஆச்சரியம் 13-14 வருடங்கள் ஆகியும் இன்று வரை அடங்கவில்லை.  [இந்தியாவை உலுக்கிய ஒரு படுகொலையை பற்றி எழுதியவர் மீது எல்லாம் ஆச்சரியத்தை விட அன்பு தான் அதிகம்!]

வெறி கொண்டு, அவருடைய மற்ற நாவல்களை எல்லாம் தேடி தேடி படித்தேன். [வாங்கி படிக்குமளவுக்கு அப்பொழுதும் இப்பொழுதும் பணமில்லை ;)] படிக்க படிக்க படிக்க அவரின் பார்முலா புரிந்தாலும் பிரமிப்பு போகவில்லை. அவரின் எழுத்தை பிரித்து மேய்ந்து அதை தனியே எழுதி டாக்டரேட் வாங்க வேண்டும் என்று நப்பாசை எல்லாம் வந்து போய் விட்டது! (பின்னே! வாங்கினால் கெளரவ டாக்டர் பட்டம் தான்). சென்னையில் இவரை பார்க்க முடியாமல் போய், இங்கிலாந்து போன உடன், இவரை எப்பொழுது எப்படி பார்க்கலாம் என்று எல்லாம் செய்த ஆராய்ச்சி. ஹ்ம்ம் பிந்து மாதவியை எப்படியாவது மீண்டும் நேரில் பார்த்து பழக வேண்டும் என்று ஆசைபட்டதை விட அதிகம். இதற்கு மேல் ஜெப்ரி மீது இருக்கும் பித்தை பற்றி எதுவும் சொல்ல முடியாது.

அப்படி என்ன ஜெப்ரி!

எழுத்து, கதை சொல்லும் திறன். அதற்காக அவரின் உழைப்பு. அப்படி ஒரு அசாத்திய உழைப்பு. சுயமரியாதை உள்ள, தொழில் தர்மம் உள்ள எந்த எழுத்தாளனும் செய்வான் என்று எல்லாம் புறந்தள்ளி விட முடியாது. இவை எல்லாவற்றையும் விட என்னை பிரமிக்க வைப்பது அவரின் சொந்த வாழ்க்கை வரலாறு.

அவரின் கதாநாயகர்களும் சரி வில்லன்களும் சரி, அவரே தான் எனத் தோன்றும். (ஆனாலும் ஆட்டோ பிக்சன் எல்லாம் இல்லை) அவர் கதைகளில் கூட எது நிஜம் எது புனைவு என்று சொல்லி விடலாம், ஆனால் அவரின் வாழ்வில் இன்னும் சொல்ல முடியவில்லை. அவரின் கதைகளைப் போலவே. அவரின் வாழ்க்கையும் மர்மம்,விறுவிறுப்பு, ஏற்றத் தாழ்வு எல்லாம் நிறைந்தது.

ஜெப்ரியின் தந்தை பற்றிய வரலாற்றில் கொஞ்சம் சரடு, ஆக்ஸ்போர்டில் படித்தார் ஆனால் படிக்கவில்லை, அப்பொழுதே பணம் சுருட்டினார் என்ற குற்றச்சாட்டு, இங்கிலாந்திற்காக ஒட்டப்பந்தயத்தில் ஒடியது, அரசியல் வாழ்க்கை, திவாலாகும் வரை போய், பின்னர் புத்தகம் எழுதி பணக்காரர் ஆகி, மீண்டும் அரசியல், கால் கேர்ள் உடன் இருந்தார் என குற்றச்சாட்டு, யார்? நானா என அவரே வாதாடி வென்று, பின்னர் பல காலம் கழித்து, கால்கேர்ள் வழக்கில், கனம் கோர்ட்டாரிடம் பொய் சொல்லி இருக்கிறார் எனத் தெரிய வந்து, அதற்காக ஜெயிலுக்கு போய், அந்த அனுபவத்தையும் புத்தகமாக்கி பணம் செய்து என்று, அட என்ன வாழ்க்கை சார்!

இரண்டாவது முறை, கல்லூரி முடித்து,காலம் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஜெப்ரியின் 1000 பக்க சிறுகதை தொகுப்பு. பல சிறுகதைகள், உண்மை சம்பங்களை அடிப்படையாக வைத்து என்று வேறு ஆரம்பத்திலேயே எழுதி உசுப்பேற்றி விடுகிறார்.

ஒவியங்கள், இடங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், வரலாறு என சிறுகதைகளுக்கு எவ்வளவு உழைப்பு. அட, இதை எல்லாம் கூகிளில் தேடி, விக்கியில் தேடி, யூடூப்பில் பார்த்து கூட ஜல்லி அடித்து விடலாம். ஆனால் அந்த உண்மை சம்பவங்கள். அந்த சுவாரஸ்யமான மனிதர்களை நேரில் பார்த்து, அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, அவர்களின் கதையை நம் கண் முன் கொண்டு வர வேண்டுமென்றால், வாட ஏ மேன்.

சத்தியமாய் ஜெப்ரி ஒரு இராட்சசன் தான்!

பி.கு 1
நான் பொறாமைப் படும் மற்றோரு நபர். அதிக பிரபலமில்லாதவர்.சக தோழர். சற்றே குள்ளமும் கூட. ஆனாலும் அவரை எட்டிப் பிடிப்பேன் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது! நம்பிக்கை நிஜமாவது என் கையில் இல்லை!

மற்றவர், மிக பிரபலமானவர். அவர்  யார்? அவர் மீது ஏன் பொறாமை என்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பி.கு 2
இதில் குறியீடாக தெரிபவை எல்லாம் என உள்மன ஆசைகள் இல்லை!

No comments: