Friday, January 29, 2016

வாஷிங் குறிப்புகள்

இந்த பேச்சிலர் சமையல் குறிப்புகள் எழுதிய போது, வாஷிங் குறிப்புகள் எழுத வேண்டி வரும் என சத்தியமாய் தெரியாது! ஏன் என்றால் எனக்கு மிகவும் பிடிக்காத வீட்டு வேலை என்றால் அது துணி துவைப்பது.

எதை எதையோ இலவசமாக தரும் அரசாங்கம் ஏன் வாஷிங் மெஷினை இலவசமாகத் தருவதில்லை என்ற ஆதங்கம் இப்பொழுதும் உண்டு. அப்படி கொடுப்பவர்களுக்கு என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் சமர்ப்பணம் செய்யலாம் என இருந்தது எல்லாம் ஒரு காலம்.

கோவையில் கல்லூரி விடுதி ஒன்றில் வாஷிங் மெஷினைப் பார்த்த பின்பு, ஏதோ  பக்கா பிகரைப் பார்த்தது போல இங்கு சேர்ந்திருக்கலாம் என்று ஒரு இரவு முழுக்க பிதற்றிக் கொண்டிருந்தேன்.  வாழிங் மெஷின் மீது அப்படி ஒரு மோகம்.  மடத்தை விட்டு தனி வீட்டுக்கு வந்தவுடன் வாங்கியது முதலில் வாஷிங் மெஷினைத்தான்.

என்ன தான் வாஷிங் மெஷின் இருந்தாலும் பின்வருவன மிக முக்கியம்

எத்தனை உள்ளாடைகள் இருக்கிறதோ அதன் எண்ணிக்கையில் இருந்து இரண்டைக் கழித்தால் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மெஷினில் துணி போட வேண்டும் என்பது தெரிந்து விடும். (உள்ளாடையை உள்புறமாக திருப்பி அணியும் பழக்கம் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது)

மெஷின் போட்டு முடித்தவுடன் துணியை எடுத்து காயப் போட்டு விட வேண்டும். பல மணி நேரம் விட்டு காயப் போடுவது, பல மணி நேரம் ஊற வைத்து துணி துவைப்பதை விட சோம்பேறித்தனமான, பொறுப்பற்ற செயல். (இதைப் படித்தவுடன் ஆஹான், சரி சரி என்று எல்லாம் மைண்ட் வாய்ஸ் வந்தால் அது எல்லாம் பிரமையே. இருந்தாலும் எதற்கும் மனநல மருத்துவரை அணுகவும்)

வாஷிங் மெஷினுக்கு  எத்தனை வாளி தண்ணீர் தேவைப்படும் என்று எல்லாம் மனக் கணக்கு போடக் கூடாது. அப்படியே போட்டாலும் மனக் கணக்கை சரி பார்க்கும் பரிசோதனையில் இறங்கவே கூடாது.

இறங்கினாலும், வாஷிங் மெஷினின் வால் போல தண்ணீர் வெளியேற்றும் குழாயை அதற்கான குழியில் இருந்து எல்லாம் எடுத்து பார்க்க கூடாது

அதே போல மிக முக்கியமானது, எலிக்கு பயந்து, மெஷினின் வாலை, வெளியேற்றும் குழாயிலிருந்து வெளியே விட்டிருந்தால், மெஷின் போடும் முன்பு வாலை குழாயில் சுருட்டி வைத்து விடவும்.

சுருட்டாமல் வாலாட்டினால் வரவேற்பறை, வாய்க்கால் வரப்பு போல் ஆகிவிடலாம்.

வரவேற்பறை வாய்க்கால் வரப்பாகி வரம்பு மீறி வரக்கூடாத படுக்கறை பக்கம் வந்தாலும், விழுந்தடித்துக் கொண்டு எல்லாம் ஒட வேண்டாம், வழுக்கி விழும் அபாயம் இருக்கிறது.

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால். வாஷிங் மெஷின் ஒருவனை உத்தமோத்தவனாக மாற்றி விடாது! உத்தமோத்தவனுக்கு நேரம் நன்றாக இல்லாவிட்டால், வாஷிங் மெஷின் இருந்தாலும் இடுப்பு வலி வரும்...


1 comment:

RamNarayanS said...

வழுக்கி விழுந்தாலும் மீசைல மண்ணு (சோப்பு) ஓட்டக்கூடாது. 😊