தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்னும் சொல்லிற்கேற்ப தெரிந்தோ தெரியாமலோ தெலுந்கு படங்களின் மீது அதீத பைத்தியம். தமிழில் தெரியும் அபத்தங்கள் தெலுங்கில் கண்ணுக்குப் படுவதில்லை. பட்டாலும் கண்டு கொள்வதில்லை.
அப்படியிருந்தும் கூட ராம்சரண் தேஜா நடித்த சிறுத்தாவைப் பார்த்து சிதறிப் போயிருந்தேன். அதன் காரணமாக ஆஹா ஒஹோ என்று
ஊரெல்லாம் புகழ் பாடியிருந்தும் அந்த மூஞ்சியைப் பார்க்க வேண்டுமா என மகதீரா பார்ப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தேன்.
கதாநாயகியும் கதாநாயகனும் மலையுச்சியிலிருந்து செத்துப் போகும் ஆரம்ப காட்சியில் இருந்தே அதகளம் தான்.
தெலுங்கு சினிமாவிற்கு தெலுங்கில் பெயர் வைக்கிறார்களோ இல்லையோ தெலுங்கில் டைட்டில் வைக்கிறார்களோ இல்லையோ பிரம்மானந்தம் இருப்பார் இதிலும் இருக்கிறார். ஆனால் காமெடி தான் இல்லை. படத்திற்கு அதன் தேவையும் இருப்பதில்லை மீனா குமாரி புகழ் நடிகையின் குத்தாட்டமும் உண்டு. கிராபிக்ஸ் புண்ணியத்தில் சிரஞ்சிவியின் பழைய டான்ஸும் உண்டு. ராம் சரண் தேஜாவும் டான்ஸில் குறை வைப்பதில்லை. எந்த தெலுங்கு ஹீரோவும் டான்ஸில் குறை வைப்பதில்லை.
இரண்டு கதாநாயகிகளில் ஒரு கதாநாயகியின் கனவில் கதாநாயகன் மற்றொரு கதாநாயகியுடன் ஆட்டம் போடுமாறு காட்சியமைக்கும் தெலுங்கு சினிமாவில் குத்தாட்ட நடிகை கூட கதாநாயகியாக தோன்றும் புரட்சியான சமாச்சாரம் எல்லாம் உண்டு
காஜல் கண்ணுக்கு குளிர்ச்சியாக! ஹும்! அதுவும் காஜலின் துப்பட்டா தனி காரெக்டர். படத்தின் பல திருப்பங்களுக்கு துப்பட்டா தான் காரணம்!
ஆசைப் பட்டால் அடைய வேண்டும் இல்லையெல் அழித்து விட வேண்டும் என்னும் பவர் புல் வில்லன். இவரைப் போய் சுறாவில் அவ்வளவு சின்னபுள்ளத் தனமாக காட்டிவிட்டார்களே என்ற வருத்தம் வராமலில்லை.
கெட்டவனும் நல்லவனும் ஒரு பெண்ணைக் காதலிக்க நல்லவன் பெண்ணை கைப்பிடிக்கும் காய்ந்து கருவாடான கதை என்று ஒதுக்கித் தள்ள முடியாத அளவு திரைக்கதையில் தூள் கிளப்பி இருக்கிறார்கள்.
அதுவும் ஒரே கதையை ஒரே படத்தில் இரு ஜென்மம் என சலிக்க வைக்காமல் இருமுறை காட்டுவதில் பின்னி பெடலெடுக்கிறார்கள்.அதுவும் ஒரு சில காட்சிகளை மூன்று முறை எல்லாம் காட்டியும் கடுப்பாக இருப்பதில்லை.
இருஜென்மங்களிலும் வில்லன் ஈட்டி எறிவதில் கில்லியாக இருப்பது, கதாநாயகியின் தந்தையைக் கொல்வது, என பல இடங்களில் இரு ஜென்மங்களுக்கும் தொடர்பு வைத்து திரைக்கதை அமைத்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.
கிளைமாக்சில் ஹெலிகாப்டரை கார் மூலம் காலி செய்வதைப் பார்க்கும் போது டை ஹார்ட் 4 நினைவில் வந்து போகிறது.
ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை வந்தும் கதைப் பற்றி சொல்லவில்லையே எனக் கேட்பவர்களுக்காக
இந்த ஜென்மத்தில், ஒரு ஸ்பரிசத்தில் முன் ஜென்மவாசனையை முகர்ந்து முகம் கூட பார்க்காமல் காதலில் விழும் கதாநாயகன்.
முன் ஜென்ம வாசனை எதுவும் இல்லாமல் காதலில் விழும் கதாநாயகி.
பழி வாங்க வந்த இடத்தில் காதலில் விழும் வில்லன்.
காதலில் விழுந்த கணமே தந்தையைக் கூட காலி செய்யும் தன்னால் அவளை தீண்டக் கூட முடியாத காரணத்தை தேடிச் செல்லும் வில்லன் முன் ஜென்ம கதையை அறிந்துக் கொள்கிறார்.
வாசனையை மட்டுமே முகர்ந்த கதாநாயகன், முன் ஜென்மத்தில் உயரத்திலிருந்து விழுந்ததைப் போல இந்த ஜென்மத்திலும் விழும் போது எல்லாக் கதையையும் நினைவுக்கு வருகிறது.
முன் ஜென்மத்தில் ஷெர் கான்னாக இருந்து கதாநாயகனின் சாவுக்கும் காதலை பிரிப்பதற்கும் காரணமாக இருந்ததை நினைத்து வருந்துபவர் சாலமனாக இந்த ஜென்மத்தில் கதாநாயகனின் உயிரைக் காப்பாற்றி காதலை சேர்ப்பதற்கும் உதவுகிறார்.
இதனிடையே வில்லனின் வில்லத் தனத்தால் கதாநாயகனை வெறுக்கும் கதாநாயகிக்கு பூர்வ ஜென்ம ஞாபகத்தை வரவைக்க அதே இடத்திற்கு கதாநாயகியைத் தூக்கி சென்று முன் ஜென்மத்தில் வில்லனைக் கொன்ற அதே கத்தியைக் கொண்டு சண்டையைப் போடுகிறார். காதலிக்கும் முன் ஜென்ம வாசனை வந்து விடுகிறது.
முன் ஜென்மத்தில் கதாநாயகியைக் கொன்றதைப் போல இப்பொழுதும் கொல்ல வில்லன் நினைக்க , முன் ஜென்மத்தில் செய்த தவறை மனதில் வைத்து முன்னெச்சரிக்கையாக வில்லனைக் கொன்று காதலியைக் காக்கிறார் கதாநாயகன்.
இதைப் படித்தப் பின். “இப்பொழுது நான் இருப்பது முன் ஜென்மமா என்ன ஜென்மம்” என்ற சந்தேகம் வந்தால் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளவும். இப்படி குழப்பமான கதையை தெள்ளத் தெளிவாக எடுத்திருக்கிறார்கள்.
மகதீரா ஒரு மிஸ் செய்யக் கூடாத படம்!