Tuesday, September 05, 2006

எய்தவர்கள் இருக்க

அம்மா என வாய் விட்டு அழைக்கும் முன்பே சித்திரக்கதை படித்துக் காட்டி, படிக்க ஆரம்பித்தவுடன் கோகுலம், பூந்தளிர் போன்ற புத்தகங்களை அறிமுகப்படுத்தி,"கண்டதை படிப்பவன் பண்டிதன் ஆவான்" என்ற நம்பிக்கையில், சிறுவர்கள் படிக்க கூடாத புத்தகங்களை எல்லாம் உங்க பையன் படிக்கிறான் என பக்கத்து வீட்டு Aunty போட்டு குடுத்ததை, இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்ட அம்மா,கல்லூரியில் படிக்கும் போது நான் எழுதிய கதைகள் எனக் காட்டி,அறிந்தும் அறியாத வயதில் எழுதும் ஆசையை தூண்டிய அப்பா,கடலை போடும் விடலை பருவத்தை எட்டும் முன்பே ஆனந்த விகடன், குமுதம், குங்குமம்,கல்கி,பாக்யா போன்ற புத்தகங்கள் படிக்க வழி செய்த தாத்தா, எனக்குள் உறங்கி கொண்டு இருந்த மிருகத்தை தட்டி எழுப்பி தினமலரில் கட்டுரை எழுத தூண்டிய என் தாத்தாவின் நண்பர், அதையும் பிரசுரம் செய்து, என்னை புல்லரிக்க வைத்த புண்ணியவான்.

சாதா நாவல்கள் படித்து கொண்டிருந்த என்னை சரித்திர நாவல்களுக்கும், குண்டு சட்டியில் குதிரை ஒட்டி கொண்டு இருந்த என்னை ஆங்கில நாவல்களுக்கும் அறிமுகப்படுத்திய என் நண்பர்கள்,என் தொல்லைகளை துவளாமல் தாங்கும் தோழர்கள், தோழிகள்.

blog தோன்றா முன் காலத்தே ,கற்றதும் பெற்றதும் எழுதிய சுஜாதா, ferrari,dubukku,jollupandi

last but latest,நம்ம ஆள் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற அவாவில்,"வெட்டியாக இல்லாமல்,உருப்படியாக ஏதாவது செய்" என அறிவுரை பகரும் பிரியமான தோழி, இரகசிய சினேகிதி(யாரும் அவளிடம் சொல்ல வேண்டாம் blog எழுதுவது மகா வெட்டி வேலை என்று!!)

ஆமாம், எதற்காக இவர்களை பற்றி சொல்கிறேன்? என்ற கேள்வி உங்கள் மனதில் இன்னும் எழ வில்லை என்றால், தட்டி எழுப்புங்கள் ஐயா!!

"குற்றம் புரிந்தவனை விட குற்றம் புரிய தூண்டியவர்களுக்கு தான் தண்டனை அதிகம்" என்று சட்டம் சொல்கிறது.ஆகையால்,"இவன் எல்லாம் blog எழுதுல,அப்படினு யார் அழுதா?" என்று நீங்கள் பாராட்டும் பாராட்டுகள் அனைத்தும் இவர்களை சாரும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்ள விரும்பிகிறேன்.

.

1 comment:

Anonymous said...

good start buddy.. Congradulations